மழை வெள்ள ஆபத்திலிருந்து 11.53 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்,மீ்ட்பு பணிகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கை:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

மழை வெள்ள ஆபத்திலிருந்து 11.53 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்,மீ்ட்பு பணிகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கை:அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

சனி, டிசம்பர் 05,2015,

 

சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் அடிக்கடி ஆலோசனை நடத்தி, வெள்ள நிவாரண பணிகளுக்கு அமைச்சர்களை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பு மேற்கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்கள், உணவு குடிநீர் , சுகாதார வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளப்பகுதிகளில் குறிப்பாக தண்ணீர் தேங்கியிருந்த 20 சதவீதம்இடங்களில் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 80 சதவீதம் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். என்றார்.

மீ்ட்பு பணிகளில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. புகார்களுக்கு இடமில்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு இடமும், உணவு பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றில் இதுவரை பெய்யாத மழை இப்போது பெய்திருக்கிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் முதல்வர் ஜெயலலிதா சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். அதை மக்களும் பாராட்டுகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறுகையில்.,
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரை இல்லாத மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 7ஆயிரத்து 367 ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன. வரலாற்றில் இது தான் முதல் முறை. சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 101 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள நான்கு ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மழை வெள்ளம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி பல முன்னெரிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த நடவடிக்கையில் 45 ஆயிரம் ஊழியர்கள் இரவும் பகலுமாக முன்னெரிச்சை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். மீட்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறையின் 395 படகுகளும் ஈடுப்படுத்தனர். மழை வெள்ள அபாயத்தில் இருந்து 11 லட்சத்து 53 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 5009 மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 7 லட்சம் பயன்பெற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவமுகாம்களும் நடத்தப்பட்டன. 92 நடமாடும் மருத்துவமுகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பாம்புக்கடி உள்ளிட்ட அனைத்து மருந்துப்பொருட்களும் போதிய அளவில் உள்ளன. சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது.தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 46 சதவீதம் நிரம்பி வழிந்ததால் வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு அதுப்பற்றி அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மழை வெள்ளத்தின் காரணமாக 245 பேர் தான் பலியாகியிருக்கின்றனர். நெருக்கடியான நேரத்திலும் 65 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டிருக்கின்றன. வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து 3000 பேருந்துகள் நேற்றும், இன்றும் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களும் இந்த பேருந்துகளில் இரண்டு லட்சம் பேர் இந்த பேருந்துகளில் பயணம் செய்திருக்கின்றனர். செல்போன் தொடர்புகள் குறித்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தகவல் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் காரணமாக இந்த செல்போன் தொடர்பு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது அமைச்சர்கள் வைத்திலிங்கம், செல்லூர் கே.ராஜூ, கோகுல இந்திரா ஆகியோரும் தலைமை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட துறை செயலாளர்களும் உடனிருந்தனர்.