மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி : முதல்வரிடம் அரசு தலைமை வழக்கறிஞர் வழங்கினார்

மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1.18 கோடி நிதி : முதல்வரிடம் அரசு தலைமை வழக்கறிஞர் வழங்கினார்

சனி, பெப்ரவரி 27,2016,

அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மழை வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.18 கோடி வழங்கினார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமயாஜி , தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உச்சநீதிமன்ற நீதியரசர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், நீதித்துறை அலுவலர்கள்,

சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் மாவட்ட நீதி நிர்வாகப் பணியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட தொகையான 1 கோடியே 18 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய், தலைமை ஆட்சியாளர் மற்றும் பொதுநிலை பொறுப்புரிமையர் சார்பில் அளிக்கப்பட்ட தொகையான 10 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.  தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 373 கோடியே 32 லட்சத்து 10 ஆயிரத்து 875 ரூபாயாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.