மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

23 november 2015

 

செங்குன்றம்,

பலத்த மழையின் காரணமாக மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளான பிரகாஷ் நகர், கணபதி நகர், சந்திரபிரபு காலனி, சீதாபதி நகர், வெங்கடசாய்நகர், ஆசிரியர்கள் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் அந்த பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. மூர்த்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவைச் சேர்ந்த பணீந்தர ரெட்டி, துணை மேயர் பெஞ்சமின், மாதவரம் மண்டலக்குழு தலைவர் வேலாயுதம், கவுன்சிலர் சாந்தி எத்திராஜ், வட்டசெயலாளர் எத்திராஜன் மற்றும் மாதவரம் மண்டல பொறியாளர்கள், பொதுபணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேயர் சைதை துரைசாமி, வெள்ளம் புகுந்த வீடுகளை பார்வையிட்டு மோட்டார்கள் மூலம் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தொற்று நோய் பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.