மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

மின்சாரம், கல்வி, சுகாதாரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு

புதன், பெப்ரவரி 17,2016,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
2016-17-ம் ஆண்டுக் கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக் கால பட்ஜெட்) சட்டசபையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கே எம்.எல்.ஏ.க்கள் வரத்தொடங்கினர்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10.53 மணிக்கு அவைக்கு வந்தார். அவருடன் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார்.

11 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் வந்தமர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்தார்.

வரி இல்லாத பட்ஜெட்

காலை 11.03 மணிக்கு, 70 பக்கங்களைக் கொண்ட இடைக்கால பட்ஜெட் உரையை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படிக்க தொடங்கினார். இரண்டே கால் மணி நேரம் படித்த அவர், பிற்பகல் 1.19 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.

இது இடைக்கால பட்ஜெட் என்பதால் மரபுப்படி புதிய அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று தனது உரையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். மேலும், இந்த இடைக்கால பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட்டாக அவர் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க.வின் இந்த5 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும், அவற்றுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது, 2015-16-ம் நிதி ஆண்டின் இறுதியில், ஒட்டுமொத்த திட்ட இலக்கான ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 888 கோடி ரூபாயை தமிழ்நாடு எட்டும். 2016-17-ம் நிதி ஆண்டிற்கான ஆண்டு திட்ட ஒதுக்கீடு, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும். என்றாலும், இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் 60 ஆயிரத்து 610 கோடி ரூபாய் உத்தேசமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். கல்வி, மின்சாரம், சுகாதாரம், அரசு ஊழியர்கள் நலனுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதன் மூலம், ஐந்தாண்டு திட்டக்கால முடிவில், ஒட்டுமொத்த திட்டச் செலவு 2 லட்சத்து 31 ஆயிரத்து 498 கோடி ரூபாய் அளவை எட்டிவிடும். 12-ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஒட்டுமொத்த செலவு இலக்கான, 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவை தமிழகம் தாண்டும் என்றும் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததில் இருந்து உரை முழுவதும் படித்து முடிக்கப்படும் வரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார். உரை முடிந்ததும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து அவர் பாராட்டினார்.

நிதி இழப்பு ஏன்?

தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தின் நிதி ஆதாரங்கள் பற்றி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிகழ்த்திய உரை வருமாறு:-

2016-2017-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் பற்றி கூற விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில், வரி வருவாயில், குறிப்பாக வணிக வரி வருவாயில், காணப்பட்டு வந்த குறைவான வளர்ச்சி 2015-16-ம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது. எனவே பெட்ரோலிய பொருட்களின் விற்பனையிலிருந்து கிடைக் கக்கூடிய விற்பனை வரி வருவாயும் பெருமளவு குறைந்து விட்டது. இதனால், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சொந்த வரி வருவாய்

கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையை மத்திய அரசு பலமுறை உயர்த்தி, தனது வருவாயைப் பெருக்கி தக்கவைத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களும் இதுபோன்றே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி வருவாய் இழப்பை ஈடுசெய்துள்ளன. ஆனால் தமிழக அரசு அந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நிலவி வரும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு 2015-16-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், 86 ஆயிரத்து 537.70 கோடி ரூபாயாக உள்ள மாநில சொந்த வரி வருவாய், 2016-17-ம் நிதியாண்டில் 96 ஆயிரத்து 531.41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வணிகவரி வருவாய்

2015-16-ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் கணக்கிடப்பட்டதைவிட, வணிக வரி வருவாய் 11.69 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. எனவே 2016-17-ம் நிதியாண்டில் இது 72 ஆயிரத்து 326.45 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய், வரும் நிதியாண்டில் 7 ஆயிரத்து 101.81 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில், முத்திரைத்தாள்கள் மற்றும் பதிவு கட்டணங்களின் கீழ் கிடைக் கும் வருவாய் 10 ஆயிரத்து 548.25 கோடி ரூபாய் எனவும், வாகனங்கள் மீதான வரிகள் 4 ஆயிரத்து 925.05 கோடி ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் நிதிச்சுமை

இந்த இடைக்கால வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 9 ஆயிரத்து 288.63 கோடி ரூபாய் எனவும், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 23 ஆயிரத்து 688.11 கோடி ரூபாய் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பல மத்திய அரசு திட்டங்களின் நிதி பங்கீட்டு முறை 2015-16-ம் ஆண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், 2016-17-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாயிலிருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

வருவாய் பற்றாக்குறை

இந்த மாற்றங்களைக் கணக் கில் கொண்டு, 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானிய உதவி 22 ஆயிரத்து 496.08 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், மொத்த வருவாய் வரவு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 4.23 கோடி ரூபாய் எனவும், மொத்த வருவாய் செலவீனம், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 159.01 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வரும் நிதியாண்டில் 9 ஆயிரத்து 154.78 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க இயலவில்லை

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள குறைவால், குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதால், இந்த பெரும் வருவாய் பற்றாக்குறையை தவிர்க்க இயலவில்லை.

மேலும், பசுமை வீடுகள் திட்டம், விலையில்லா மின் விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்கள், மடிக்கணினிகள் வழங்குதல், சிறப்பு பொது வினியோக திட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் போன்ற பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதும் இதற்கு காரணம்.

இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தாத பல மாநிலங்களும் பெரும் வருவாய் பற்றாக்குறை நிலையை எதிர்நோக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் அளவு

2015-16 திருத்த மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை 32 ஆயிரத்து 359.59 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.94 சதவீதமாகும். 2016-17-ம் ஆண்டில் இப்பற்றாக்குறை 36 ஆயிரத்து 740.11 கோடி ரூபாயாக இருக்கும்.

தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.92 சதவீதத்திற்குள் இந்த பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இது பதிநான்காவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரையறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.

வரும் நிதியாண்டில் 37 ஆயிரத்து 782 கோடி ரூபாய் வரை கடன் வாங்க மாநிலத்திற்கு தகுதியுள்ள போதிலும், 2016-17-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவு திட்ட மதிப்பீடுகளில் கடன் அளவு 35 ஆயிரத்து 129 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி காலம் முழுவதிலும் நிதி ஆதாரங்களைக் கையாள்வதில் மிகப்பொறுப்போடு செயல்பட்டு, நிதிப்பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் மொத்தக்கடனின் விகிதம் போன்ற பல்வேறு நிதிக் குறியீடுகளை, வரையறைக்கு உட்பட்டு பின்பற்றி இந்த அரசு செயல்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.