மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு

வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சாரம் தாக்கிய சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், சிக்கணாங்குப்பம் மஜ்ரா, திகுவாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பெருமாள் என்பவரின் மகன் வடிவேல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி, தனது வீட்டில் மின்கம்பி பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை என்பவரின் மகன் திரு. அரிகரன் கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி, தனது வீட்டினருகே மேல்நிலை மின் கம்பி மீது உரசி நின்று கொண்டிந்த தானியங்கி மண் அள்ளும் இயந்திரத்தை தொட்டதால் மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடந்த மாதம் 2-ம் தேதி, வானராங்குடி கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருச்சிடவளந்தை உட்கிராமத்தைச் சேர்ந்த திரு. தியாகராஜன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அவரது மனைவி திருமதி நீலாவதி கடந்த மாதம் 3-ம் தேதி மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாணிக்கம் என்பவரின் மகன் பரமசிவம், கடந்த மாதம் 2-ம் தேதி வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மணிகண்டன் என்பவர் கடந்த மாதம் 7-ம் தேதி வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.