சென்னையில் இன்று மின் வினியோகம் சீராகும் ; அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் இன்று மின் வினியோகம் சீராகும் ; அமைச்சர் தங்கமணி தகவல்

வியாழக்கிழமை, டிசம்பர் 15, 2016,

சென்னையில் மின் வினியோகம் இன்று 100 சதவீதம் சீராகும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

வர்தா புயலின் காரணமாக சூறைக்காற்றுடன், கன மழை பெய்ததால், சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. இதன் காரணமாக மின்சார வாரியத்தின் கம்பிகளும், தொலைபேசி கம்பிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டன.வர்தா புயலால் இதுவரை சுமார் 19 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், 450 மின்மாற்றிகள், 24 உயர் அழுத்த மின் கோபுரங்களும் பழுதடைந்துள்ளன. சென்னையில் 6 ஆயிரம் மின் ஊழியர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 3 ஆயிரம் ஊழியர்கள் என 9 ஆயிரம் பேர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள மின்உற்பத்தி நிலையங்கள் அனைத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. பேசின்பிரிட்ஜ் வாயு மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந் நிலையில், மின் வினியோகம் இன்று 100 சதவீதம் சீராகும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது ;

சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் 24 உயர் அழுத்த மின்கோபுரங்கள் சாய்ந்ததன் காரணமாகவே மின்விநியோகம் சீராவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருப்பில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்தும் மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. சென்னையை பொருத்தவரை நேற்று இரவு 90 சதவீதம் மின் வினியோகம் சீராகும். மீதம் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இன்று 100 சதவீதம் மின்வினியோகம் சீராகும்.

சென்னை புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாள்களில் புறநகர் பகுதிகளிலும் சீரான விநியோகம் நடைபெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.