மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு ; தாக்குதலை தடுத்து நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி

சனி, நவம்பர் 19,2016,

சென்னை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

நாகை மாவட்டத்திற்கு அப்பால், தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர்  மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் குண்டு காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே அமைதியான முறையில் மீன்பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இந்த சம்பவம் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும். மேலும், மீனவர்கள் சந்திப்புக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மீனவர்களை கையாள்வதில் இருநாட்டு கடற்படையினராலோ, கடலோர பாதுகாப்புப் படையினராலோ எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படக்கூடாது என இருநாட்டு அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டுக்குப் பின்னரும், அப்பாவித் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமரை முதல்வர் ஜெயலலிதா சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, தமிழக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லையை முடிந்துபோன விவகாரமாக கருதக்கூடாது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1974-ம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, அரசியல் சாசனப்படி செல்லாது என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அதிர்ச்சி தரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உறுதியளித்தார்.