“மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா உளம் கனிந்த நல்வாழ்த்து

“மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா உளம் கனிந்த நல்வாழ்த்து

புதன், டிசம்பர் 23,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா, “மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், தமது உளம் கனிந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் ஜெயலலிதா தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றினால், வாழ்வில் ஏற்றம் பெறலாம் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல எண்ணம், நடத்தையை பாதுகாக்கும் – வயதும் காலமும் வீணாகும் முன், நன்மையான காரியங்களை விரைந்து செய்யுங்கள் – மற்றவர்களின் தவறுகளைத் தேடி அலையாதீர்கள் – ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள் – சகோதரர்களாக வாழுங்கள் – பசித்தவர்களுக்கு உணவளியுங்கள் என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் உலகிற்கு அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெருமக்களின் நல்வாழ்விற்காக உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது – புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்கி வருவது – தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தியது – பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி – தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது – மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு வழங்கப்படும் இணை மானியத் தொகையை உயர்த்தியது – மசூதிகள் மற்றும் தர்காக்கள் புனரமைத்திட 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி – நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதை இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவுகோலாகும் என்றுரைத்த இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இப்பொன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தமது இனிய “மீலாதுன் நபி” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.