முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,வெள்ளம் பாதித்த இடங்களில் உணவு, குடிநீர் பரிசோதனை:தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

வெள்ள பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் உணவு, குடிநீர் ஆகியவற்றின் தரம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகத் துறை, பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து டிசம்பர் 9-ஆம் தேதி முதல் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 24 மாவட்ட நியமன அலுவலர்கள், 70 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து சென்னையில் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் பிரிவினர் 7 குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்த் தடுப்பு மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 147 குளிர் சாதனப் பெட்டிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2-ஆவது பிரிவு 8 குழுக்களாகப் பிரிந்து பாதிக்கப்பட்ட இடங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்களை அமைப்பது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். 3}ஆவது பிரிவு 8 குழுக்களாகப் பிரிந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளை கண்காணித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுவரை தனியாருக்குச் சொந்தமான 716 லாரிகளில் குளோரின் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி குளோரின் கலக்காமல் தண்ணீர் விநியோகிக்கும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.