முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் காரணமாக,கனமழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் குறுகிய காலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக “தினத்தந்தி” நாளிதழ் பாராட்டு

முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் காரணமாக,கனமழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் குறுகிய காலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக “தினத்தந்தி” நாளிதழ் பாராட்டு

சனி, டிசம்பர் 12,2015,

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், கிராமங்கள் மட்டுமின்றி நகரப் பகுதிகளிலும் சூழ்ந்த வெள்ளத்தை, போர்க்கால அடைப்படையில் அகற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, மாநில பேரிடர் குழு, பொதுப்பணி, வருவாய், காவல் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. தமிழக அரசின், கடைகோடி ஊழியர் முதல் தலைமைச் செயலாளர் வரை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதையடுத்து, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அசாதாரண சூழ்நிலையில் ஏற்பட்ட பேரிடர், முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளின் காரணமாக, குறுகிய காலத்தில் சீரடைந்துள்ளதாக பிரபல தமிழ் நாளிதழ் தினத்தந்தி தலையங்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது. இதேபோல், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளனர்.

தினத்தந்தி நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், வழக்கமாக மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை, சில நாட்களிலேயே முழுமையாக கொட்டித்தீர்த்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. வெள்ள சேத விவரத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 4 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா உடனுக்குடன் ஆய்வு செய்து வந்தார். முதலமைச்சரின் உத்தரவின்பேரில், கடைக்கோடி அரசு ஊழியர்கள் முதல், தலைமைச் செயலாளர் வரை மீட்பு நடவடிக்கைகளில் இரவு-பகல் பாராது ஈடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப பெரும் பாடுபட்டனர். அத்துடன், ராணுவ குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் என அனைவரும் இணைந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ள சேதம் பற்றி பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய உடனேயே, நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. முதற்கட்டமாக 940 கோடி ரூபாயும், பின்னர் ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக வெள்ள நிவாரணப் பணிக்காக மத்திய அரசு ஒதுக்கியது. பின்னர் தமிழகத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடர் என்று அறிவிக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று, தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்தது. இவ்வாறு தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பாராட்டு தெரிவிப்பதாக தினத்தந்தி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்திருந்த நேரத்திலும், வெள்ளநீர் அகற்றிய பின்னரும், அனைத்து துறை ஊழியர்களும் 24 மணி நேரமும் தொய்வின்றி மேற்கொண்ட நடவடிக்கை வரலாறு காணாதது என்றும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை நகரவாசிகள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக குறைகூறி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.