முதலமைச்சர் அம்மாவின் திட்டங்கள்,உதவிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது:அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேச்சு

முதலமைச்சர் அம்மாவின் திட்டங்கள்,உதவிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது:அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேச்சு

வியாழக்கிழமை, ஜனவரி 28, 2016,

வீடுதோறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் உதவிகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார்.

அண்ணா தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய பேச்சை மக்களிடம் எடுத்து சொல்லவும், அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கவும் 115வது வார்டு அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. துணை செயலாளரும், 115வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி.விஜயராம கிருஷ்ணா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பொதுக்கூட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி சேக்தாவூத் தெருவில் நடந்தது.
பிரம்மாண்டமாக நடந்த இந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி அமைச்சரும் அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளருமான எஸ். கோகுல இந்திரா பேசினார்.

முதலமைச்சர் அம்மாவுக்கு என்றுமே வெற்றி தான். மக்களுக்காக நான் மக்களால் நான் என்ற லட்சியத்துடன் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் அம்மா.
தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். வருங்கால சந்ததியினரும் திட்டத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்மாவின் ஒவ்வொரு திட்டமும் உள்ளது.
தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குவேன் என்றார். இன்று பல துறைகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
சமீபத்தில் வௌ்ளம் வந்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. 5 நாட்களிலேயே சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். இவ்வளவு பெரிய சேதத்தினால் தொற்று நோய் வருவது உண்டு. ஆனால் முதலமைச்சர் அம்மா வீதிக்கு வீதி மருத்துவ முகாம்களை நடத்தியும், வீடுகளுக்கே சென்று முகாம்களை நடத்தியதால் தொற்று நோய் சிறிதும் ஏற்படவில்லை. இதனை அனைவரும் பாராட்டினார்கள்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அம்மா நிறைவேற்றி இருக்கிறார்.
இதனை சட்டசபையில் முதலமைச்சர் அம்மா புள்ளி விவரத்துடன் எடுத்து கூறினார். தேர்தல் நேரத்தில் சொல்லாத எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஜெயலலிதாவின் திட்டங்கள் உதவிகள் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளது. ஒவ்வொருவர் வீட்டிலும் ஜெயலலிதா இருக்கிறார். ஜெயலலிதா மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் நடந்த உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், இடைத்தேர்தல்களில் எல்லாம் மக்கள் அம்மாவுக்கு வெற்றி தந்தார்கள்.
இதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் அம்மாவுக்கு வெற்றி தந்தார்கள்.
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவுக்கு 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி தருவார்கள். இது உறுதி.இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.

இந்த கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, மாணவர் அணி செயலாளர் எஸ். ஆர். விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் சத்யா, தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏ.ஏ. அர்ஜூனன், பகுதி செயலாளர் அப்துல் கறீம் என்கிற வி.கே.பாபு, மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.எம்.கே. முகமது அலி ஜின்னா, மா. பாண்டியன், எம்.ஜி.ஆர். வாசன், ஏ.எம். அலிகான் பசீர் மற்றும் எஸ். நீலகண்டன், ஜெ. சீனிவாசன், த. சையத் அலி,இப்ராகீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வட்ட செயலாளர்கள் ஐஸ்அவுஸ் ம.மோகன், ஆல்தோட்டம் அ.சிவசங்கர் நன்றி கூறினார்கள்.
இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. துணை செயலாளரும், 115வது வார்டு மாமன்ற உறுப்பினருமான டி. விஜயராமகிருஷ்ணா மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த பகுதி முழுவதும் அண்ணா தி.மு.க. கொடி தோரணங்கள் இரட்டை இலை மின் விளக்குகள், அண்ணா தி.மு.க. ஆட்சி சாதனை விளக்க பேனர்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தேர்தல் களை கட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.