முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

ஞாயிறு, 22 நவம்பர் 2015

 

                         சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்து பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

                சென்னை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும், சென்னை மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிவாழ் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
முதலமைச்சர் வெள்ள நிவாரண ஒருங்கிணைப்புக் குழுக்களை ஒவ்வொரு வார்டுகளுக்கும் அமைக்க ஆணையிட்டு 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மண்டல உதவி செயற்பொறியாளர், உதவி வருவாய் அலுவலர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார அலுவலர், துப்புரவு அலுவலர், துப்புரவு மேற் பார்வையாளர், அந்தந்த மண்டலத்திற்குரிய சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர், பொதுப் பணித்துறை அலுவலர், காவல்துறையை சார்ந்த அலுவலர் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஒருங்கிணைப்பு குழு வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணியின் போது துறைகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை சரிசெய்வதோடு மட்டுமல்லாமல் தினமும் ஒருமுறை அனைவரும் கூடி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இந்தக் குழுவானது வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை இயங்கும். முதலமைச்சர் ஜெயலலிதா நியமனம் செய்த பதினைந்து இந்திய ஆட்சிப் பணி சிறப்பு மேற்பார்வை அதிகாரிகள் தலைமையின் கீழ் அனைத்து மண்டலங்களிலும் வெள்ள நீரால் தெருக்களில் ஏற்பட்ட கழிவுகளை கூடுதல் பணியாளர்களை அமர்த்தி உடனடியாக அகற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க கொசு மருந்து தெளித்தல், புகை அடித்தல் போன்ற பணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெருந்திரளான பணியாளர்களை கொண்டு மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிநடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 281 சென்னைப் பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்து பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 96 முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டு நேற்று 42 முகாம்களில் மட்டும் 6,600 நபர்களுக்கு 5,5060 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மண்டலங்களிலும் நேற்று 226 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி இதில் 37,141 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
இன்றும் தொடர்ந்து 204 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு கருதி துண்டித்து வைக்கப்பட்டு இருந்த தெருவிளக்கு மின் இணைப்புகளும், வீடுகளுக்கு கொடுக்கும் மின் இணைப்புகளும் திரும்ப வழங்கப்பட்டு பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் இன்று தேங்கியுள்ள மழை நீரை 900 லாரி நடைகள் மூலமாக நேற்று அகற்றி உள்ளது. மேலும் நீர் இறைக்கும் இயந்திரம் மூலமாக 1000 மி.லி. மழைநீர் வெளியேற்றப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மனித உயிரிழப்புகளுக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவிகளை அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்டு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாவட்டத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழையின் காரணமாக உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.44,00,000, சேதமடைந்த 66 வீடுகளுக்கு நிவாரண உதவியாக ரூ. 2,83,300 ஆக மொத்தம் ரூ.46,83,300 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.