முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று, வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இரவு-பகல் பாராமல் பாடுபட போவதாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சூளுரை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று, வரும் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இரவு-பகல் பாராமல் பாடுபட போவதாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் சூளுரை

ஞாயிறு, ஜனவரி 17,2016,

அ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாளான இன்று, சென்னையில் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டாக்டர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்ட முதலமைச்சர், கழக நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த முதலமைச்சருக்கு சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் செண்டைமேளம், பேண்டு வாத்தியங்கள், இசைக் கருவிகள் முழங்க முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு வழங்கினர்.

தலைமைக் கழகத்தில், கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக தொண்டர்களும் பெருந்திரளாக திரண்டு முதலமைச்சரை வரவேற்றனர்.

அதன் பின், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து,அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்கு இரவு-பகல் பாராமல் பாடுபடப்போவதாக சூளுரைத்தனர்.