முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி “புதிய நம்பிக்கை மையத்தை” அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் புதிய நம்பிக்கை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.எச்.ஐ.வி தொற்று இல்லா தமிழகத்தை உருவாக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் அன்னவாசல் அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை மேற்கொள்ளும் நம்பிக்கை மைய திறப்புவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் எஸ்.நடராசன் திட்ட விளக்கவுரையாற்றினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.பரிமளாதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கே.வி.அர்ஜீன்குமார் வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சையது முகைதீன் நன்றியுரையாற்றினார்.

புதிய நம்பிக்கை மையத்தை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசியதாவது:–

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலமைச்சர் அம்மா ஆட்சியில் தான் 1994ம் ஆண்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு தான் மத்திய அரசு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் பிற மாநிலங்களில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தை ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 33 ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழகத்தில் 1986-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு நபருக்கு எச்.ஐ.வி தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 28 வருடங்கள் ஆகிவிட்டது. எச்.ஐ.வி தொற்று தடுப்பதற்குண்டான மருந்தினை கண்டுபிடிப்பதற்கு பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொற்று நோய் குறைகிறது

முதலமைச்சர் அம்மாவின் உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், அரசின் சுகாதார அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக சங்கங்கள், தோழமை அமைப்புகள் மற்றும் அரசின் பிற துறைகளுடன் இணைந்து மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் எச்.ஐ.வி தொற்று தமிழகத்தில் குறைந்து வருகிறது. 2012–-13 ஆண்டில் 0.36 சதவீதமாக இருந்த தொற்று இப்போது 0.25% ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 90 விழுக்காடு கர்ப்பிணித் தாயிடமிருந்து குழந்தைக்கு நெவரெப்பின் என்ற மருந்து மூலம் எச்.ஐ.வி தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நம்பிக்கை மையம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் 1898 உள்ளன. 55 ஏ.ஆர்.டி கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும் உள்ளன. 173 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 16 இலவச சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பால்வினை நோய் தடுப்பு சேவை மையங்கள் 156 இடங்களில் இயங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் எச்.ஐ.வி தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் புதிய எச்.ஐ.வி தொற்றினை தடுக்கும் வகையில், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எச்.ஐ.வி-யை தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் புதிய மருந்துகள் சென்ற ஆண்டு முதல் வழங்கப்படுகிறது,. எச்.ஐ.வி தொற்று பாதிப்புக்குள்ளானோருக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, காசநோய் அறிகுறி உள்ள அனைவரும் எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ள முன் வர வேண்டும்.
எச்.ஐ.வி. கண்காணிப்பு தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. இந்த வருடம் புதிதாக ஒருங்கிணைந்த எச்.ஐ.வி. உயிரியல் மற்றும் நடத்தை ஆய்வு நடைபெறவிருக்கிறது. இதன் மூலம் எச்.ஐ.வி. எவ்வாறு ஒருவரின் நடத்தையுடன் சம்பந்தபட்டுள்ள விவரம் தெரிய வரும். மற்றும் இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான பல திட்டங்களை வகுக்க இயலும்.

தமிழக அரசு எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகளை அனைவருக்கும் கட்டணமில்லாமல் வழங்கி வருகிறது. முதலமைச்சர் அம்மா அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்டு, 350 சிடி-4-க்கு கீழ் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு மாதந்தோறும் மாதம் ரூ.1000- உதவிதொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு ரூ.10 கோடி தொகையினை வைப்பீடு நிதியாக வழங்கி, அதன் வட்டியிலிருந்து கிடைக்கும் நிதியிலிருந்து எச்.ஐ.வி தொற்று மற்றும் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி மற்றும் ஊட்டச் சத்திற்கு மாவட்ட கலெக்டர்கள் மூலம் நிதி உதவி அளித்து வருகிறது.
எச்.ஐ.வி தொற்று, தடுப்பு சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள், ஏ.ஆர்.டி. மையங்கள், இணைப்பு ஏ.ஆர்.டி. மையங்கள், ஆதரவு மையங்கள், சட்ட உதவி மையங்கள், பாதுகாப்பான ரத்தம் வழங்குவதற்கு தரமான ரத்த வங்கிகள், பகுப்பாய்வு மையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் கட்டணமில்லா ஹலோ ப்ளஸ் (1800-419-1800) தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதை செயல்படுத்தும் விதமாக, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ஆண்டுதோறும் நிதியுதவியும், எச்.ஐ.வி தொற்றுள்ளோர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியமும், எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் அம்மா அறிவித்த பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. புதிய தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதால் தமிழகத்திலுள்ள 9,580 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 13 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2,021 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எய்ட்ஸ் நோயை தடுக்க அனைவரும் தன்னார்வ ரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என்றும், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சம உரிமை அளித்து அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசினார்.