முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்

முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தீவிர நடவடிக்கையால் தமிழகம் எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக திகழும்

வியாழன் , பெப்ரவரி 04,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் காரணமாக, புற்றுநோயிலிருந்து ஏராளமானோர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் ஒருகோடியே 30 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களும் உயர்தர சிகிச்சை பெறும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக புற்றுநோய் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், முதலமைச்சரின் ஆணைப்படி, சென்னை அரசு பொதுமருத்துவமனையில், குணமடைந்த புற்றுநோயாளிகளின் புத்துணர்ச்சி நடை பயிற்சியை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும், டிஜிட்டல் நுண்கதிர் இயந்திரத்தையும் அமைச்சர் பார்வையிட்டார். தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் ஒருகோடியே 30 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வித்துறை இயக்குனர் டாக்டர் விமலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, புற்றுநோயை தடுக்கவும், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தவும், சென்னையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் 120 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழக அரசு அளித்து வரும் உதவிகள், புற்றுநோய் சிகிச்சைகளுக்கு மிகப்பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையிலும், புற்றுநோய் சிகிச்சைக்கென அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டு, கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக, எதிர்காலத்தில் புற்றுநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.