முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர  முயற்சியால் சென்னையில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதா, திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு உதவிகளை அளித்து வருகிறார். திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், குடியிருப்புகள் அளித்தல் என பல்வேறு உதவிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக சிறப்பு முகாம் ஒன்று சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை காவல்துறை ஒத்துழைப்புடன் தனியார் தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்த முகாமில் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் 400-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களிடம் பெயர், வசிப்பிடம், கல்வித் தகுதி, விரும்பும் வேலை போன்ற விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய முகாமுக்கு ஏற்பாடு செய்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திருநங்கைகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

சமூகத்தால் பொதுவாக புறக்கணிக்கப்படும் திருநங்கைகளும் மற்றவர்களை போல வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.