முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே விளக்கும் வகையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே விளக்கும்  வகையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், தமிழகம் முழுவதும்  எழுச்சிப் பயணம்

திங்கள் , பெப்ரவரி 15,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும், முதலமைச்சரின் சட்டப்பேரவை உரைகளையும், அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் எழுச்சிப் பிரச்சாரப் பயணம் இன்று நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து கடந்த மாதம் உரையாற்றினார். முதலமைச்சர் ஆற்றிய உரையில், கழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், நிறைவேற்றியுள்ள சாதனைகள் உள்ளிட்டவை விரிவாக இடம்பெற்றிருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த எழுச்சி உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் இன்று எழுச்சிப் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.

தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற எழுச்சிப் பிரச்சாரப் பேரணியை கழக பொருளாளரும், அமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கழக மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான திருமதி. எஸ். கோகுல இந்திரா, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெருந்திரளான மகளிர் அணியினர் கலந்து கொண்டு, புல்லா அவென்யூ, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவீதியம்மன் சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து, கழக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினர்.

தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், சைதாப்பேட்டையில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் கழக அமைப்புச் செயலாளரும், மாநில மகளிர் ஆணையத் தலைவருமான திருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, வீதி வீதியாகச் சென்று முதலமைச்சரின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

வடசென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், சூளை பகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில், கழக அமைப்புச் செயலாளர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கினர்.

இதனிடையே, திருச்சி புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருந்து மகளிர் அணி எழுச்சிப் பிரச்சாரப் பயணம் புறப்பட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரப் பயணத்தில், கழக பாசறை மாநிலச் செயலாளர் திரு. ப.குமார், எம்.பி., அமைச்சர் திரு. T.P.பூனாட்சி, புறநகர் மாவட்டச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சமயபுரம் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பிரச்சார பயணத்தில், 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். 234 தொகுதிகளிலும் முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.