முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.இ.அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:இரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அ.இ.அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்:இரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு!

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. சார்பில், நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரத்ததான முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. P. பழனியப்பன், திரு. எம்.சி. சம்பத் ஆகியோர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, வேட்டி, சேலை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. அருண்மொழிதேவன், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்டம், தியாகராயநகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ஏழை-எளியோருக்கு அமைச்சர்கள் திருமதி பா. வளர்மதி, திருமதி எஸ். கோகுலஇந்திரா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், மேயர் திரு. சைதை துரைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருமழிசையில் 8 ஆயிரத்து 68 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. B.V.ரமணா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு 680 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இம்முகாம்களில், சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. உதகை அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம் தொடக்க நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.ஆர். அர்ஜூனன், தாட்கோ தலைவர் திரு. எஸ். கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், கண்டனூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், மாத்தூர், அழகாபுரி, கண்டனூர் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டது.

நெல்லை புறநகர் மாவட்ட கழக இலக்கிய அணி சார்பில், சேரன்மாதேவியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா ஆதரவற்ற பள்ளியில், 100 மாணவர்களுக்கு சீருடைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தங்களின் பிரார்த்தனை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை, அந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்து 668 பயனாளிகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட கழக மருத்துவ அணி சார்பில், தத்தனூர் தனியார் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மா. சந்திரகாசி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் பாதாள காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.