முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு

புதன், பெப்ரவரி 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று(புதன்கிழமை) 68–வது பிறந்தநாள் ஆகும். ஜெயலலிதா பிறந்தநாளை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று 68 கிலோ ‘கேக்’ வெட்டி கட்சியினர் கொண்டாடுகின்றனர்.

‘அம்மா’ உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஏழை–எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவில்கள், தேவாலயங்கள், தர்காக்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.

இலவச உணவுபெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து ‘அம்மா’ உணவகங்களிலும் சர்க்கரை பொங்கலுடன் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்தநாளையொட்டி, கடந்த 14–ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க.வினரும் கடந்த சில நாட்களாகவே ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் அதற்கேற்றார் போன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

6,868 திருக்கோவில்கள்இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

குரு பகவான் சிம்ம ராசியிலும், கதிரவன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும்போது வரும் பவுர்ணமி தினத்தன்று மக நட்சத்திரத்திலும், ரிஷப லக்னத்திலும் கூடும் புண்ணிய நாள் 22.2.2016 ஆகும். இந்த புண்ணியத் திருநாளில் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் வருவதும் மற்றுமொரு சிறப்பாகும்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இன்று வில்வ மரக்கன்றுகள் சைவ திருக்கோவில்களிலும், புன்னை மற்றும் மகிழம் மரக்கன்றுகள் வைணவ திருக்கோவில்களிலும் நடப்படுகிறது. 32 மாவட்டங்களில் 6,868 திருக்கோவில்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.