முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த வேலையற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் படித்த, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய கடனுதவியை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார். இதன்தொடர்ச்சியாக, சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை, சிட்கோ தலைமையக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ஊரகத் தொழில், தொழிலாளர் நலன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. P. மோகன், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. பா. வளர்மதி ஆகியோர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் மானியத்தொகையை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு. P. மோகன், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை வங்கியாளர்கள் 220 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 27 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீட்டிற்கு கடன் ஒப்புதல் ஆணை வழங்கியுள்ளார்கள் என்றும், இதில், அரசு மானியம் 31 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயாகும் என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே 140 பயனாளிகளுக்கு 69 லட்சத்து 88 ஆயிரம் திட்ட மதிப்பீட்டிற்கு 17 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடன் கடன்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை பெறும் இளைஞர்கள், தொழில்களில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளரும், தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிக இயக்குநருமான திரு. அம்புஜ் சர்மா, சென்னை மாவட்ட ஆட்சியர் திரு. ஜி. கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கடனுதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க, உதவிய முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.