முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா!

செவ்வாய், மார்ச் 01,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சாண்டை உள்ளிட்ட போட்டிகள் ஒரே திடலில் நடைபெற்றது, அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்தது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டுத் துறைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள், வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை, புதிய விளையாட்டு அரங்கங்கள் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் பிரம்மாண்ட விளையாட்டுத் திருவிழா நடைபெற்றது. மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டுத் திடலில் நடைபெற்ற 68 வகையான போட்டிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். போட்டிகளை அமைச்சர்கள் திரு. செல்லூர் கே. ராஜூ, டாக்டர் எஸ். சுந்தரராஜ் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பாரம்பரிய கிராம விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வழுக்குமரம் ஏறுதல், பல்லாங்குழி, கோலிக்குண்டு, பம்பரம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச்சுடுதல், ஓட்டப்பந்தயம், கபடி, வாலிபால், வாள்வீச்சு, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, நீச்சல் உள்ளிட்ட போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மாநகர அ.இ.அ.தி.மு.க சார்பில் சிறப்பாக செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், மேயர் திரு. ராஜன் செல்லப்பா, டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு. S.T.K. ஜக்கையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஒரே திடலில் நடைபெற்ற பலவிதமான விளையாட்டுப் போட்டிகள், அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

முன்னதாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகள், ஒலிம்பிக் தீபத்தினை ஏந்தியபடி எம்.ஜி.ஆர். விளையாட்டுத் திடல் வரை பேரணியாக அணிவகுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்ட அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.