முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று,பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வருகை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று,பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வருகை

புதன், டிசம்பர் 09,2015,

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்த நிவாரண உதவிப் பொருட்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் ஒருங்கிணைக்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை முழுவதுமாக மீட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தொய்வின்றி வழங்கவேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், அமைச்சர்கள், உயரதிகாரிகள், பல்வேறு துறைகளின் அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களின் தேவைகளுக்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சார்பிலும், அ.இ.அ.தி.மு.க. மற்றும் தனியார் அமைப்புகள் சார்பிலும் நிவாரண உதவிப் பொருட்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கொண்டுவரப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் உயரதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேலம் மாநகராட்சி சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள், பாத்திரங்கள், அரிசி, பருப்பு வகைகள் அனைத்தும் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் திரு. சவுன்டப்பன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவற்றை பார்வையிட்டனர்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.