முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ; தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் ஆலோசனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ; தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் ஆலோசனை

திங்கள் , நவம்பர் 07,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவரை தனி வார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இதுதவிர லண்டனை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா மற்றும் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களின் ஆலோசனையில் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவருடைய உடல்நிலையில் விரைவாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா மற்றும் ஜூடி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர்.சீமா மற்றும் ஜூடி ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் கை, கால்களை அசைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். எழுந்து உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விரைவில் நடப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நுரையீரல் நோய் தொற்று குணமாகி உள்ள நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட செயற்கை சுவாசம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு இயற்கையாக சுவாசிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிகிறார்.

மேலும் தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அவரே கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். கடந்த சில தினங்களாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அவரது வீட்டில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிசியோதெரபி பயிற்சிகள் முடிந்து அவர் இயல்பாக நடக்கத்தொடங்கிய உடன் ஜெயலலிதா வீடு திரும்புவார் என்று நலம் விசாரிக்க வருபவர்களிடம் டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதைத்தொடர்ந்து டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளார். தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.