முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்தது வெற்றி: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்தது வெற்றி:   ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி

வெள்ளி, ஜனவரி 08,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சி காரணமாக, தமிழ்நாட்டில், பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் படி தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது – இந்த ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது – ஜல்லிக்கட்டு தொடர்பாக 2006-ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது – உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு, அதாவது, Review Petition மனுவினை தாக்கல் செய்யும்படி தாம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசால் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது – இந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்சநீதிமன்றம் தடை செய்து ஆணை வழங்கியதற்கு முக்கியக் காரணம், தி.மு.க அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை தான் என்றும், அந்த அறிவிக்கையின்படி காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது – மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது – கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி பாரதப் பிரதமரிடம், தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை தாம் அளித்துள்ளதாகவும், அதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தாம் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டிருந்ததாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது – இது பற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத் தொடரில் பேசியுள்ளனர் – எனினும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அனுமதிக்க வகை செய்யும் மசோதா எதுவும் தாக்கல் செய்யப்படாத சூழ்நிலையில், தாம், பாரதப் பிரதமருக்கு இது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அந்தக் கடிதத்தில் இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என பாரதப் பிரதமரை, தாம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், நேற்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது – இந்த அறிவிக்கையில் காளைகள் என்பது காட்சி விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை வெளியிட்டுள்ளது – அதில் உச்சநீதிமன்றம் தனது 2014-ம் வருடம் மே மாதம் 7-ம் தேதியிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள 5 உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது – மத்திய அரசின் இந்த அறிவிக்கையின் காரணமாக, தமிழ்நாட்டில், வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை – தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலும் என்பதால், எதிர் வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட இயலும் – ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும்படி தாம் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பாரதப் பிரதமருக்கு, தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.