முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு : வழிநெடுகிலும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டுநின்று வரவேற்றனர்

வியாழன் , டிசம்பர் 31,2015,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கில் பல்லாயிரக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தையொட்டி, அ.இ.அ.தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்களுடன் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் எண்ணற்ற சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் பதாகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

அ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமது இல்லத்திலிருந்து புறப்பட்ட கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு, வழிநெடுகிலும், சாலையின் இருமருங்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வாழ்த்து கோஷங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகள் முழங்க, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், வழிநெடுகிலும் முதலமைச்சரின் சாதனைகளை விளக்கும் பதாகைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் பதாகைகள் வைக்கப்பட்டு, அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. கழகக் கொடிகள், தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற வளாகத்தின் முன்பு அண்ணா, எம்.ஜி.ஆர்., முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படங்களுடன் கூடிய அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கூட்டம் நடைபெறும் அரங்க வாயில் முன்பு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், செயற்கை யானைகளுடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை, அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன், கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் பூங்கொத்துகள் வழங்கி வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, கழக செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, கழக நிர்வாகிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். அ.இ.அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, அவைத்தலைவர் தலைமையேற்று நடத்தித்தர முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.

இதனை திரு. ஓ. பன்னீர் செல்வம் வழிமொழிந்தார். பின்னர், அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. மேடையில், அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் திருமதி பா. வளர்மதி, திருமதி எஸ். கோகுலஇந்திரா ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வீரவாள் வழங்கினர்.

தீர்மானங்களை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வழிமொழிந்தார். பொதுக்குழுக் கூட்டத்தை, அவைத் தலைவர், தலைமையேற்று நடத்தித் தருமாறு முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார். இதனை கழகப் பொருளாளரும், நிதியமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் வழிமொழிந்தார்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் திரு. வைத்திலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். கழக அமைப்புச் செயலாளர் திரு. பொன்னையன், மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர், அ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் 14 தீர்மானங்களை அமைச்சர் திருமதி பா. வளர்மதி வாசித்தார். இதனைத் தொடர்ந்து, கழக அமைப்புச் செயலாளர் திரு. பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் ஆகியோர் உரையாற்றினர். இதன் பின்னர், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, செயற்குழு மற்றும் பொதுக்குழு சிறப்புப் பேருரை நிகழ்த்தினார்.