முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய ஆய்வுக் குழு ஆலோசனை : வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – மத்திய ஆய்வுக் குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய ஆய்வுக் குழு ஆலோசனை : வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – மத்திய ஆய்வுக் குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக் குழுவினர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அவர்களிடையே பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெள்ளசேத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க்கால அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டின் கனமழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியை, உடனடியாக தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அளவுக்கு மத்திய நிதியுதவியை அளிக்க ஏதுவாக, மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், மழை-வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பது மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு, உடனடி நிதியுதவியாக 939 கோடியே 63 லட்சம் ரூபாயை, தமிழக அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டது. மேலும், வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து, கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க, விரைவில் மத்திய ஆய்வுக் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.

இதன்படி, திரு. T.V.S.N. பிரசாத் தலைமையில் தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக்குழுவினர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அவர்களிடையே பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் பெய்துள்ள மிக பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக தமது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மத்திய அரசின் நிதியுதவி விரைந்து கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிக விரிவாக மதிப்பீடு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது, மத்திய உள்துறை இணைச் செயலாளர் திரு. T.V.S.N. பிரசாத், தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட வெள்ளசேத விரிவான அறிக்கையை தான் படித்ததாகவும், அதிலிருந்து தமிழக அரசு வெள்ளி சேதங்களை தடுப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் உடனடி நிவாரண, சீரமைப்புப் பணிகள் தெளிவாகத் தெரிகின்றன என தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் உயிரிழப்பு மற்றும் வெள்ள சேதங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன என்று தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வெள்ள பாதிப்பு பகுதிகளை மத்திய குழு நேரில் பார்வையிட்டு மத்திய அரசுக்கு விரைந்துஅறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் திரு. T.V.S.N. பிரசாத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் திரு. T.V.S.N. பிரசாத், வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் திரு.Y.R.மீனா, நிதியமைச்சக இணை இயக்குநர் திரு.M.M.சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் திரு.G.R.Zargar, மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குநர் டாக்டர் ஆர்.ரோஷினி, எரிசக்தி துறை உதவி இயக்குநர் திரு.சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் திரு.B.C.Behera, மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் திரு.N.M. கிருஷ்ணன் உன்னி, சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குநர் திரு.D.S. அர்விந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மற்றும் தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி, வருவாய்த்துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார் ஆகியோருடன் தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஆலோசகர், நிதித்துறை முதன்மை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வேளாண்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

மத்திய ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை இன்று முதல் வரும் 28ம் தேதி வரை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபடும்.