முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் சிந்திய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ; ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

புதன், டிசம்பர் 07,2016,

சென்னை  ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போது ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார்.

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தடைந்தார். பின்னர் காரில் ராஜாஜி அரங்கத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதா உடலுக்கு மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஜெயலலிதா உடலுக்கு அருகில் சோகத்துடன் நின்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு மோடி ஆறுதல் கூறி தேற்றினார்.

பிறகு தான் வந்த வாகனத்திற்கு மோடி திரும்பிய போதும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத பன்னீர்செல்வம் மீண்டும் ஒருமுறை பிரதமரை கட்டித் தழுவினார். அதே போல் அழுது கொண்டிருந்த சசிகலாவுக்கும் பிரதமர் மோடி தலையில் கை வைத்து ஆறுதல் தெரிவித்தார். அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது செல்போனில் படம் பிடிக்க வேண்டாம் என்று கைகூப்பிய படியே கேட்டுக் கொண்டே பிரதமர் அவ்விடத்திலிருந்து வெளியே சென்றார்.