முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், 7 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு : வரும் தேர்தலில் அதிமுக‬ வெற்றிக்காக உழைப்போம் என்று அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், 7 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு : வரும் தேர்தலில் அதிமுக‬ வெற்றிக்காக உழைப்போம் என்று அறிவிப்பு

திங்கள் கிழமை,மார்ச் 14,2016,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை நேற்று , இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம் ஆகிய அமைப்பு மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், தனித்தனியே நேரில் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு, தங்கள் கட்சிகளின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல், வரும் மே மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திரு. S.M. பாக்கர், துணைத் தலைவர் திரு. ஐ. முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் திரு. A. முஹம்மது சித்திக், துணைப் பொதுச் செயலாளர் திரு. A. முஹம்மது ஷிப்லி, பொருளாளர் திரு. A.I. பிர்தவ்ஸ் ஆகியோர் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தங்களது அமைப்பின் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொண்டு, கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் திரு. C. செங்குட்டுவன், பொருளாளர் திரு.K. நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும்;

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. P.V. கதிரவன், எம்.எல்.ஏ., தேசிய செயலாளர் திரு. G. தேவராஜன், மாநில துணைத் தலைவர் திரு. C. முத்துராமலிங்கம் உள்ளிட்டோரும்;தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் திரு. உ. தனியரசு, எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், பொதுச் செயலாளர் திரு. வை. காவேரி, அமைப்புச் செயலாளர் திரு. மே.ப. காமராஜ், இணைப் பொதுச் செயலாளர் திரு. எம்.எஸ். சண்முகம் ஆகியோரும்; தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் திரு. S. ஷேக் தாவூத், பொதுச் செயலாளர் திருமதி ரேஷ்மா தாவூத், மகளிர் அணித் தலைவர் திருமதி ரெசூலா தாவூத், தலைமை நிலையச் செயலாளர் திரு. K. ஜாகீர் உசேன் ஆகியோரும்; சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் திரு. எர்ணாவூர் A. நாராயணன், எம்.எல்.ஏ., பொருளாளர் திரு. எம். கண்ணன், இளைஞர் அணிச் செயலாளர் திரு. K.A.S.R. பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளும், தனித் தனியே நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தங்களுடைய கட்சிகளின் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகளின் போது, அமைச்சர்கள் திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. எடப்பாடி K. பழனிசாமி, திரு. P. தங்கமணி, திரு. S.P. வேலுமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.