முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

ஞாயிறு, அக்டோபர் 02,2016,

அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு சென்றார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே சென்ற கவர்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் 7.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (நேற்று)அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார். ஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். முதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.