முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தலைஞாயிறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,600 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

கள்ளிமேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை, எளிய மகளிர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் 47 பேருக்கு விலையில்லா கறவை பசுக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியங்களுக்குட்பட்ட பம்மது குளம், லட்சுமிபுரம், பாண்டேஸ்வரம், செங்குன்றம், அலமாதி, பாடியநல்லூர், சோழவரம் ஆகிய 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 67 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகையாக தலா ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையாக 467 பயனாளிகளுக்கு 11 லட்சத்து 800 ரூபாயும், 5 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை தலா 8 ஆயிரம் ரூபாய் உட்பட 496 பயனாளிகளுக்கு 14 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 598 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதில், அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. குமார், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனிடையே, கல்வித்துறைக்காக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதையொட்டி, உயர்கல்வி பயில்வோரின் வளர்ச்சி விகிதம் உயர்ந்து தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்தியதற்காகவும், ஏழை, எளிய மக்களின் துன்பத்தை போக்கும் வகையில், குறைந்தவிலை பருப்பு விற்பனை திட்டத்தை செயல்படுத்தியதற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.