முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நாமக்கல்லில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25 ஆயிரம் பேருக்கு பணி வழங்க ஏற்பாடு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நாமக்கல்லில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25 ஆயிரம் பேருக்கு பணி வழங்க ஏற்பாடு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம், பல்லக்காபாளையத்தில் அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பல்லக்காபாளையம் விவேகானந்தர் மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த முகாமில் பல்வேறு புகழ் பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் திரு.P.தங்கமணி, மாவட்ட ஆட்சியர் திரு.தட்சிணாமூர்த்தி ஆகியோர் அரசு அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. குடிநீர், உணவு, ஓய்வு அறை, போக்குவரத்து வசதி போன்றவற்றை சிறப்பாக செய்து தரவேண்டும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த முகாமில், தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் மொத்தம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.