முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, ஜனவரி 02,2016,

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்றே முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைத்து, அவர்கள் கல்வி பயில வசதியாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஒன்று முதல் 9ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்களும், காலாண்டு தேர்வுக்குப் பின்னர் 2ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் வழங்கப்பட வேண்டிய 3ஆம் பருவ பாடப்புத்தகங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் இன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சத்து 800 மாணவ-மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் விற்பனைக்காக 81 லட்சத்து 9 ஆயிரத்து 500 பாடப்புத்தகங்கள் உட்பட மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3ஆம் பருவத்திற்கு பள்ளி தொடங்கப்பட்ட நாள் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதற்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், திருக்கோயிலூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 2 ஆயிரத்து 364 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்து 43 ஆயிரத்து 229 மாணவ மாணவிகளுக்கு, மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணியை வடக்கனந்தல் அரசுமேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திரு. ப. மோகன் தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவ, மாணவியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் அந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.