முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,பொது மக்களுக்காக கனமழையிலும் மாநகர பஸ்கள் இயக்கம்,மழையிலும் சாலைகளை சீரமைப்புப் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,பொது மக்களுக்காக கனமழையிலும் மாநகர பஸ்கள் இயக்கம்,மழையிலும் சாலைகளை சீரமைப்புப் பணி தீவிரம்

புதன், டிசம்பர் 02,2015,

 

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்களின் வசதிக்காக மாநகர பஸ்கள் நிறுத்தாமல் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கனமழை பெய்து வருவதால்,  பூந்தமல்லி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகள் சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய பைக், கார் போன்ற வாகனங்களை வீடுகளில் விட்டுவிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

மாநகர போக்குவரத்துக்கழகமும் பொதுமக்களின் வசதிக்காக பஸ்களை நிறுத்தாமல் இயக்கி வருகிறது. பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், அரங்கநாதன், சேத்துப்பட்டு உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், போலீஸாரின் வழிகாட்டுதலின்படி பஸ்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன. பஸ் நிறுத்தத்தில் மட்டும் மக்களை ஏற்றாமல், சாலையில் எங்கு கை காட்டினாலும் ஓட்டுநர்கள் பஸ்களை நிறுத்தி ஏற்றிச் செல்கின்றனர். அதேபோல் இறக்கியும் விடுகின்றனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூரும்போது, “மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் 3,450 பஸ்களில் தினமும் சுமார் 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கனமழை பெய்து வருவதால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் 3,200-க்கும் மேற்பட்ட பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

பஸ்ஸுக்குள் தண்ணீர் வந்தாலும், ஓட்டுநர்களும் மிகவும் கஷ்டப்பட்டு ஓட்டி வருகின்றனர். தண்ணீர் அதிகமாக உள்ள சாலைகளில் மட்டும் சில பஸ்கள் பழுதாகி நின்றுவிடுகின்றன. ஆனாலும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்கள் சாலையில் எங்கு கை காட்டினாலும் ஏற்றிச் செல்ல வேண்டும். இறக்கி விட வேண்டும் என்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தெரிவித்துள்ளோம்” என்றனர்.

மழையிலும் சீரமைப்புப் பணி

நேற்று திடீரென மழை பெய்த நிலையில், மழைக்கு இடையே சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எங்கள் பணிகளை நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் போடும் சிமென்ட் கலவைகள் விரைவாக இறுகும் தன்மை கொண்டது’’ என்றார்.