முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது

புதன், டிசம்பர் 09,2015,

தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் காரணமாக இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி, ஏ.ரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட மூவாயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்களை அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர்செல்வம், திரு. B.V. ரமணா ஆகியோர் வழங்கினர். மேலும், தத்தைமஞ்சி – பொன்னேரி சாலையில், ஏ. ரெட்டிபாளையம் அருகே ஆரணி ஆற்றின் ஓரம் துண்டிக்கப்பட்ட சாலையை பார்வையிட்ட அமைச்சர்கள், அதனை விரைந்து சீரமைக்கும் படி, அதிகாரிகளை துரிதப்படுத்தினர்.
மேலும், திருவொற்றியூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, சானிடரி நாப்கின்கள், விலையில்லா வேட்டி-சேலை, ரொட்டி உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர். காந்தி நகர்ப்பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை அமைச்சர்கள் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர், சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கனமழையால் குடிசை வீடுகள் சேதமடைந்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 465 பேருக்கு 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் திரு. எம்.சி. சம்பத், திரு. R.B. உதயகுமார், ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, மழைவெள்ள நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இயல்பு வாழ்க்கை திரும்பியது. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குளோரின் பவுடர் தூவப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் திரு. P. பழனியப்பன், திரு. P. தங்கமணி, திரு. T.K.M. சின்னையா, கண்காணிப்பு சிறப்பு அதிகாரி திரு. க. ராஜாராமன், மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர். கஜலட்சுமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மழையால் சேதமடைந்த பெருங்களத்தூர் ஏரியை மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை அமைச்சர்கள் திரு. S.P. வேலுமணி, திரு. T.K.M. சின்னையா ஆகியோர் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.
பாலவாக்கம், பொன்னியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், உணவு, குடிநீர், போர்வை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய ஆற்றங்கரை, வேட்டைக்காரன் இருப்பு, வண்டல் குண்டுரான்வெலி உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்களைக் கொண்டு மழைவெள்ள நீரை வெளியேற்றும் பணியையும், JCP இயந்திரம் மூலம் அடைப்புகளை அகற்றும் பணியையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

மேலும், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களில் தாழ்வான இடங்களில் வசித்து வந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது.