முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் இரவு-பகலாக நடைபெற்று வரும் போர்க்கால வெள்ள நிவாரண நடவடிக்கை:சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் இரவு-பகலாக நடைபெற்று வரும் போர்க்கால வெள்ள நிவாரண நடவடிக்கை:சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்புகிறது

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் 252 இடங்களில் தேங்கியிருந்த தண்ணீர் இறைக்கப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் 470 பம்பு செட்டுகளும், தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்கு சொந்தமான தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், நீர்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்குவதற்காக சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு சொந்தமான 71 சூப்பர் சக்கர் இயந்திரங்களும், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 4 சூப்பர் சக்கர் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 13 லட்சத்து 16 ஆயிரத்து 725 உணவுப் பொட்டலங்களும், 3 லட்சம் ரொட்டி பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும், 29 முகாம்களில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 850 உணவுப் பொட்டலங்களும், 50 ஆயிரம் ரொட்டி பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறையின் மூலம், மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 93 ஆயிரத்து 823 நபர்கள் பயனடைந்துள்ளனர். நேற்று மட்டும், 216 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றில் 36 ஆயிரத்து 40 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்திற்கு ஏற்றாற் போல், உபரிநீர் வெளியேறுவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 10, 11, 12 மற்றும் 13 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட அடையாறு, கூவம், மற்றும் கொசஸ்தலையாறு ஆற்றுப் பகுதிகளில் வாழ்ந்து வந்த 25,595 பேருக்கு எவ்வித பாதிப்புமின்றி சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக அழைத்து வரப்பட்டு, 40 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்தப் பணியில் சென்னை மாநகராட்சி, தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மீன்வளத்துறை, தீயணைப்பு துறை மற்றும் தேசிய கப்பற்படைகளை சார்ந்த சுமார் 50 படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, மனித மற்றும் கால்நடை உயிரிழப்புகளுக்கும், சேதமடைந்த வீடுகளுக்கும் உயர்த்தி வழங்கப்பட்ட உரிய நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077ல் புகார்கள் பெறப்படுகின்றன.

வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் சேதங்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் 10 வட்டங்களிலும் வருவாய்த் துறையின் அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பணிகளை துரிதப்படுத்தி கண்காணித்திடவும், சேதங்களை கணக்கிடவும், அரசிற்கு விரைந்து அறிக்கை அனுப்பிடும் வகையில் அனைத்து வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 7 குடிசை வீடுகள் முழுமையாகவும், 48 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. அவற்றில் 6 குடிசை வீடுகளுக்கு முழுமையான சேதத்திற்கும், 40 குடிசை வீடுகளுக்கு பகுதியான சேதத்திற்கும் அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முழுமையான சேதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், வேட்டி-சேலை மற்றும் 10 கிலோ அரிசியும், பகுதியாக சேதமடைந்ததற்கு 4,100 ரூபாயும், வேட்டி-சேலை மற்றும் 10 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து, அடையாற்றின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஊடகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டனர். இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.