முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முழுவீச்சில் நடைபெற்று மழை நிவாரண சீரமைப்புப் பணிகள் -தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முழுவீச்சில் நடைபெற்று மழை நிவாரண சீரமைப்புப் பணிகள் -தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

சனி, நவம்பர் 21,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, முழுவீச்சில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, மழை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி அளிக்கப்படுவதோடு, தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மழை வெள்ளம் பாதித்த பகுதியில் அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர், 3-வது நாளாக இன்று முகாமிட்டு, நிவாரண நடவடிக்கைகளை பார்வையிட்டார். தாழ்வான பகுதியில் மழைநீரை அகற்றும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. தண்ணீர் பரிசோதனை, தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் கொசுமருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் போன்ற நடவடிக்கைகளோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. நிவாரணப் பணிகளில் தீயணைப்புத்துறை, சென்னை மாநகராட்சி, காவல்துறை, கழிவுநீர் அகற்று வாரியம் ஈடுபட்டுள்ளன. தண்ணீரை காய்ச்சி குடிக்கும்படி ஒலிப் பெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு வாழ்க்கைக்கு தாங்கள் திரும்ப வகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் மேற்கொள்ளப்படும் மழை நிவாரணப் பணிகளை அமைச்சர் திருமதி கோகுல இந்திரா இன்று நேரில் பார்வையிட்டார். இப்பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், வடகிழக்கு பருவமழையின் காரணமாக, வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த படாளத்தைச் சேர்ந்த சேகர், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கட்டம்மா மற்றும் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரைச் சேர்ந்த ரங்கநாதன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, அரசின் நிவாரண உதவியாக, தலா 4 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், புல்லாபுரம், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் கொருக்குபேட்டை ஆகிய பகுதிகளில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களையும், அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா வழங்கினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிதியுதவி பெற்றவர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கனமழையால் மிகவும் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வரகூர்பேட்டை, கொடிப்பள்ளம் கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களையும், கான்சாகிப் வாய்க்காலில் ஆகாயத் தாமரைக் கொடிகளை மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியையும், அத்தொகுதி எம்.பி. திரு. மா. சந்திரகாசி, நேரில் பார்வையிட்டார். பின்னர், பிச்சாவரம் மீனவ கிராமத்தில் 500 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதித்த இடங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டதன் பயனாக, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடப்பேரி, கன்னடபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை இழந்த 17 பேருக்கு மொத்தம் 74,100 ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர்கள் திரு.S.P. வேலுமணி, திரு.T.K.M. சின்னையா ஆகியோர் வழங்கினர்.

கனமழையால் உயிரிழந்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய்க்கான காசோலை, அவரது தாயாரிடம் வழங்கப்பட்டது. நிதியுதவி வழங்கி, ஆறுதல் தெரிவித்தமைக்காக முதலமைச்சருக்கு சதீஷ்குமார் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய பல்லாவரம் மற்றும் ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த 5 பேருக்கு நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.