முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

செவ்வாய், நவம்பர்,24-2015

பலத்த மழையால், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக லாரிகள் இயக்கப்படும் என்று சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறினார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஞாயிற்றுக்கிழமை வரை 86 கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் இயக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக 20 ஊர்திகள் பயன்படுத்தப்படும். தேவையான அளவு வாகனங்கள் இருக்கிறது என்றார்.
இதுகுறித்து சமூக நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி கூறியது: சென்னை மாநகரில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 23 வரை 1,184 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 61.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 4,000 கன அடியும், புழல் ஏரியில் வினாடிக்கு 1,500 கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 8,600 கன அடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கரையோரங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி காணப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 23 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 14 மையங்கள் பள்ளியிலும், 9 மையங்கள் திருமண மண்டபங்களிலும், இதர கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில், 2,939 பேர் தங்கியுள்ளனர்.
மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 5,000 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படும். ஆனால், இப்போது கழிவுகள் அகற்றப்படுவதால் 6500 மெட்ரிக் டன்னாக கூடியுள்ளது. குப்பை அகற்றும் பணிக்கு கூடுதலாக 175 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மழை நிவாரணப் பணியில் 23,500 பணியாளர்கள் உள்ளனர். கூடுதலாக 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீர் புகுந்த இடங்களைச் சுத்தம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இன்று (திங்கள்கிழமை) 15 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் மழையின் காரணமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ. 44,00,000-மும், சேதமடைந்த 66 வீடுகளுக்கு நிவாரண உதவியாக ரூ. 2,83,300-மும் ஆக மொத்தம் ரூ. 46,83,300- வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேயர் சைதை சா.துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிட்கோ நகரில் பாதிப்பு குறைந்தது
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று ஜவுளி, கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியது: சிட்கோ நகரின் ஒரு சில தாழ்வான இடங்களில் நீர் இப்போதும் தேங்கியுள்ளது. இவற்றை அகற்ற அதிகத் திறன் கொண்ட மோட்டார்கள் தனியாரிடமிருந்து பெறப்பட்டு, வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். வேகமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கூவம் ஆற்றுக் கரையோரம் வசிப்போரும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர் கோகுல இந்திரா.
மின்சாரத் துறையை கண்காணிக்க நடவடிக்கை: மழை காலங்களில் மின்சாரத் துறை கவனிப்புடன் செயல்படுமாறு மின்சாரத் துறையை முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்த்துக்கு நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார் அமைச்சர் கோகுல இந்திரா.