முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

செவ்வாய், நவம்பர்,24-2015

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், உள்ளிட்ட அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன. மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, புதிய ரேஷன் கார்டுகள் அளிக்கப்படுகின்றன. சேதமடைந்த வீடுகள், கால்நடைகளுக்கென, முதலமைச்சர் ஆணையின்பேரில் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

சென்னையில், தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், வெள்ள நிவாரண மீட்புப் பணிகள், சீரமைப்புப் பணிகள், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு 23 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியன வழங்கப்படுகின்றன.

மழைநீர் புகுந்த வீடுகள், கட்டடங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர் நிகழ்வாக, புகை அடித்தல், பிளீச்சிங் பவுடர் போடுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 200 வார்டுகளில் 216 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக 37,314 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழையின் காரணமாக உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா 4 லட்சம் ரூபாய் வீதம் 44 லட்சம் ரூபாய் – சேதமடைந்த 66 வீடுகளுக்கு நிவாரண உதவியாக 2 லட்சத்து 83 ஆயிரத்து 300 ரூபாய் என மொத்தம் 46 லட்சத்து 83 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலைமுதல் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமது இல்லங்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேருவதற்கு வசதியாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டதோடு, இரவு நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மழை வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கனமழை நிரம்பிவரும், மதுராந்தகம் ஏரியிலிருந்து வினாடிக்கு 12,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு கொளவாய் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர், களத்தூரான் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

திருப்போரூர் தொகுதி தையூர் ஊராட்சிப் பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

வாலாஜாபாத், வேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த 239 குடிசைகளுக்கு 9 லட்சத்து 79 ஆயிரத்து 900 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

கடலூரில் வெள்ளம் சூழ்ந்த OT, ஐந்துகாரத்துஅம்மன் கோயில் தெரு, பீமாராவ் நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளுக்கு படகில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அமைச்சர் திரு. எம்.சி. சம்பத், வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர், வெள்ள நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை அவர்கள் படகுகள் மூலம் மீட்டனர்.

மேலும், விருத்தாச்சலம் ஒன்றியம் மூ.பட்டி கிராமத்தில், இடிதாக்கி இறந்த அஞ்சலை குடும்பத்தாரிடம், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, உதவித் தொகையினையும் அமைச்சர் திரு. எம்.சி. சம்பத் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விநாடிக்கு ஆயிரத்து 519 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழைநீரால் சூழப்பட்டுள்ள திருவொற்றியூர், அண்ணாமலைநகர்ப் பகுதியில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் திரு. B.V. ரமணா உணவுப் பொருட்களை வழங்கினார்.

மேலும், கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள அண்ணா அறிவியல் கோளரங்கம், மழைநீரால் சூழப்பட்டதையடுத்து, அதனை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை, அரசு தலைமைக்கொறடா திரு. ஆர். மனோகரன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்த குடும்பத்தினருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு, விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. உபரி நீர் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்பதால், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடரும் கனமழை காரணமாக விழுப்புரம் நகரில் தாழ்வான பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வசித்து வந்த ஆயிரத்து 200 பேர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மதுரை வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மாநகராட்சி மேயர் திரு. ராஜன்செல்லப்பா முன்னிலையில், முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், வைகையாற்றில், ஆகாயத்தாமரை அகற்றுதல், ஆற்றின் கரைகளை உயர்த்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, திருவாதவூர் ஆகிய பகுதிகளில் மழையால் வீடுகள் சேதடைந்தவர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட 10 கிராமங்களில் கனமழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வள்ளியூர், ராதாபுரம் மற்றும் பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் விலையில்லா வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியன வழங்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 700 ரூபாய் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன.

நாகை மாவட்டம் பணம்பள்ளி, திருநகரி, வேட்டங்குடி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து, அங்கிருந்த 600-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகளிலிருந்து, நவீன இயந்திரங்கள் மூலம் வெள்ள நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இப்பணிகளை, நிவாரண ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.

இப்பகுதியில், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 24 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.