முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களை மீண்டும் பார்வையிட மத்திய குழு சென்னை வருகை

முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களை மீண்டும் பார்வையிட மத்திய குழு சென்னை வருகை

செவ்வாய், ஜனவரி 05,2016,

கனமழை காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தலைமையிலான மத்திய குழு, இரண்டாம் கட்டமாக சென்னை வந்துள்ளது. இக்குழு, பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் ஆய்வு செய்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது முதல் மூன்று கட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்து தேவையான நிதியை வழங்குவதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியபடி, மத்திய குழுவை தமிழகத்திற்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. T.V.S.N. பிரசாத் தலைமையிலான 9 பேர் கொண்ட இந்தக் குழு, கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்தது.

அதன்பிறகு, 4-வது முறையாக பெய்த மிகக்கடுமையான மழை காரணமாக, தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகள் மற்றும் பொது சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்ய தேவையான 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்க ஏதுவாக, மீண்டும் அதே குழுவை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் திரு. T.V.S.N. பிரசாத் தலைமையில், வேளாண் அமைச்சக கூடுதல் ஆணையர் திரு.Y.R.மீனா, நிதியமைச்சக இணை இயக்குநர் திரு.M.M.சச்தேவா, குடிநீர் அமைச்சக முதுநிலை ஆலோசகர் திரு.ஜார்கர், மத்திய குடிநீர் அமைச்சக மூத்த மண்டல இயக்குநர் ரோஷினி, எரிசக்தி துறை உதவி இயக்குநர் திரு. சுமித் கோயல், ஊரக மேம்பாட்டு அமைச்சக இயக்குநர் திரு.V.C.போரா, மத்திய நீர்வள அமைச்சக மேற்பார்வை பொறியாளர் திரு. N.M. கிருஷ்ணன் உன்னி, சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல இயக்குநர் திரு.T.S. அரவிந்த் ஆகியோர் அடங்கிய மத்திய குழு சென்னையில் இன்று ஆய்வு செய்கின்றனர்.

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, விருகம்பாக்கத்தில் உள்ள வேம்புலியம்மன் கோயில் தெரு, வளசரவாக்கம் ஆகிய இடங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.