முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது:மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது:மத்திய அமைச்சர்  வெங்கைய நாயுடு பாராட்டு

வியாழன் , டிசம்பர் 10,2015,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குவிந்துகிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டிருப்பதாக பாராட்டியுள்ள மத்திய அரசு, திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் வடிந்துள்ள நிலையில், தேங்கியுள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்ற அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்ற மக்களவையில் விருதுநகர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. D. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ள நிலையில், வெள்ளப் பாதிப்புக்குள்ளான தமிழகத்திற்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு. M. வெங்கைய நாயுடு, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகமோசமான வெள்ளப்பாதிப்புகள் கவலை அளிக்கக்கூடியது என்றும், வெள்ளம் வடிந்துள்ள சூழ்நிலையில், குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பாராட்டினார்.