முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கிய 20 லிட்டர் விலையில்லா குடிநீருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.விலையில்லாமல் சுத்தமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்கள்.
முதற்கட்டமாக சென்னையில் தற்போது 20 இடங்களில் குடிநீர் வழங்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மக்கள் ‘கியூ’வில் நின்று தண்ணீரை பிடித்து செல்கிறார்கள்.
தனியாரிடம் குடிநீர் வாங்கினால் மாதம் குறைந்தபட்சம் 900 ரூபாய் வரை செலவாகும். இப்போது அரசு விலையில்லாமல் குடிநீர் வழங்குவதால் எங்களுக்கு மாதம் 900 ரூபாய் மிச்சமாகிறது என்று குடிநீர் பிடித்து சென்றவர்கள் தெரிவித்தார்கள்.ஒவ்வொரு குடிநீர் வினியோக நிலையத்திலும் ஒரு மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் மினரல் வாட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.
விலையில்லா குடிநீர் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 28–ந்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். அன்றைய தினம் 7 குடிநீர் வழங்கும் நிலையத்தை துவக்கி வைத்து ஸ்மார்ட் கார்டுகளையும் வழங்கினார்.
சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘மினரல் வாட்டர்’ என்று  பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், அதாவது Reverse Osmosis  மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த  குடிநீரை தாங்களும் வாங்கிப் பருக வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின்  விருப்பமாகும். இதனை நிறைவேற்றும் வகையில், ‘அம்மா குடிநீர் திட்டம்’ என்ற  ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி, முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏழை  எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை  சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள்  அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் மணிக்கு 2,000 லிட்டர் நீர்  சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். தேவைக்கேற்ப இதன் செயல்திறன்  அதிகரிக்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆய்வகங்கள் மூலம்  பரிசோதிக்கப்பட்டு அதன் தரம் உறுதி செய்யப்படும். பொதுமக்களுக்கு விலை  ஏதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு  நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்  மூலம் பயன் பெற விரும்பும் ஏழை எளிய மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு  தானியங்கி நிலையத்திலிருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில் Smart Card  வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
வெளியே 20 லிட்டர் சுத்திகரிக்கப்படட குடிநீர் 30 ரூபாய், 35  ரூபாய் என விற்கிறார்கள். இப்போது இந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை  விலையில்லாமல் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.
இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இப்போது தினசரி 20 லிட்டர் குடிநீர் விலையின்றி கிடைப்பதால் தாய்மார்கள்  மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
தினசரி 30 ரூபாய், 35 ரூபாய் எங்களுக்கு மிச்சமாகிறது. எங்கள்  பகுதியிலேயே நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதால் மகிழ்ச்சி.  எங்கள் பகுதியிலே இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சென்று  குடிநீர் பிடித்து கொள்ளலாம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி  தருகிறது என்று தாய்மார்கள் கூறினார்கள்.
எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சாவித்திரி கூறுகையில், நான் தினமும் இங்கு  வந்து தண்ணீர் பிடித்து செல்கிறேன். வெளியே 20 லிட்டர் சுத்திகரிக்கப்படட  குடிநீர் 30 ரூபாய், 35 ரூபாய் என விற்கிறார்கள். தினமும் ஒரு கேன் என்று  வாங்கினாலும் மாதத்திற்கு 30 கேன் வாங்க வேண்டி வரும். இதனால் மாதம்  ரூ.900 ரூபாய் செலவாகும்.
இப்போது அம்மா குடிநீர் தரமாக, சுத்தமாக விலையில்லாமல் கிடைக்கிறது. மிகுந்த  சந்தோஷமாக உள்ளது.  அம்மாவுக்கு நன்றி. மீண்டும் அம்மாவே முதல்வராக வரவேண்டும் என்று  மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிவலிங்கபுரத்தை சேர்ந்த இந்திரா கூறுகையில், எங்கள் வீட்டில்  குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். இதனால் தினமும் 20 லிட்டர்  குடிநீர் தேவைப்படுகிறது. இதுவரை வௌியில் 35 ரூபாய்க்கு கேன் தண்ணீர்  வாங்கி வந்தோம். அந்த தண்ணீர் சுத்தமாக உள்ளதா, தரமாக உள்ளதா என்று தெரியாது. ஆனால் அம்மா குடிநீர் தரமானதாக, சுத்தமாக உள்ளது. அதுவும் விலையில்லாமல் கிடைக்கிறது. இது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
தண்ணீரும் மிகவும் டேஸ்டாக உள்ளது. தினமும் இங்கு வந்து தண்ணீர் பிடித்து செல்கிறேன்.
கேன் தண்ணீர் சப்ளை செய்வர்களுக்கு பலமுறை போன் செய்து  தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று சொல்ல வேண்டும். ஆனாலும் கூட தண்ணீர் உடனே  வராது. தற்போது எங்கள் வீட்டின் அருகிலேயே இந்த நிலையம்  அமைக்கப்பட்டிருப்பதால் விரைவில் சென்று தண்ணீர் எடுத்து வர முடிகிறது.  அம்மாவுக்கு என்றும் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்று  கூறினார்.
கன்னியாகபுரத்தை சேர்ந்த வசந்தா கூறுகையில், முதலமைச்சர்  அம்மா விலையில்லாமல் அரிசி தந்தார். எங்கள் வீட்டின் பிள்ளைகள் படிக்க  நோட்டு, புத்தகம், சீருடை தந்தார். சைக்கிள் வழங்கினார். எங்கள் பகுதியில்  அம்மா உணவகம் திறந்துள்ளார். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அம்மா  செயல்படுத்தி உள்ளார். தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலையில்லாமல்  கிடைக்கிறது. இது எனக்கும், என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மிகுந்த  மகிழ்ச்சியை தந்துள்ளது. அம்மாவுக்கு நன்றி. இதுபோன்ற திட்டங்களை மேலும்  வழங்க அம்மாவே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று கூறினார்.