முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் அவர் உடல் நலம் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் ; தா.பாண்டியன்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் அவர் உடல் நலம் குறித்து  அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் ; தா.பாண்டியன்

வெள்ளி, அக்டோபர் 07,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தனர்.மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்புவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அனைத்து சமய மக்களும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அனைத்துக்கட்சித்தலைவர்களும் நேரில் கேட்டறிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். மூத்த அமைச்சர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய தா.பாண்டியன் கூறியதாவது:-

முதல்வருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் அவரது நம்பிக்கைக்குரியவர்களை சந்தித்து அவரது உடல்நலம் குறித்த விவரங்களை கேட்டறிந்தேன். முதலமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பாமல் சிலர் அவதூறுகளை பரப்புவது நல்லதல்ல, மாண்பும் அல்ல, அவதூறு பரப்புவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார்.