முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்,வதந்திகளை நம்பவேண்டாம் : அப்பல்லோ மருத்துவமனையில் ராகுல் காந்தி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்,வதந்திகளை நம்பவேண்டாம் : அப்பல்லோ மருத்துவமனையில்  ராகுல் காந்தி பேட்டி

சனி, அக்டோபர் 08,2016,

சென்னை ; முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் ட்விட்டர் மூலம் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வந்தார்.

விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த ராகுல்காந்தி முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். சுமார் 11.30 மணி முதல் 12.15 மணிவரை மருத்துவமனையில் டாக்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார். அவருக்கு டாக்டர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக விளக்கம் அளித்தனர். இதன்பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார். முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக சென்னை வந்தேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய என் சார்பிலும் சோனியாகாந்தி சார்பிலும் வாழ்த்துகிறேன் முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.