முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக பொதுமக்கள் கருத்து

செவ்வாய், டிசம்பர் 22,2015,

கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டதால், தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்த் தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், உடனடியாக 2 ஆயிரம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கவும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதேபோல, சுகாதாரத் துறையினரால் நடத்தப்பட்டு வரும் ஆயிரத்து 105 மருத்துவ முகாம்களை மேலும் நீட்டிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கொசுக்கள், கொசுப்புழுக்கள் மற்றும் ஈக்களை ஒழிப்பதற்கான புகை மருந்து அடிக்கும் பணியினை பூச்சியியல் வல்லுநகர்கள் அடங்கிய 17 குழுக்கள், தனித்தனியே வீடுவீடாகச் சென்று மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறையுடன், மத்திய சுகாதாரத்துறை குழுவும் இணைந்து பணியாற்றி வருகின்றது. இதுபோன்ற தமிழக சுகாதாரத்துறையின் போர்க்கால நிவாரணப் பணிகள் காரணமாக, வெள்ளம் சூழ்ந்த எந்த ஒரு பகுதியிலும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை என ஏற்கெனவே மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆய்வு குழுவின் தலைமை இயக்குநர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, மேற்கொண்ட நடவடிக்கைகளால் தாங்கள் தொற்றுநோய்களில் இருந்து முழுவதும் பாதுகாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.