முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மாணவ-மாணவிகளின் கல்வித் தரம் உயர்வு

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 உண்டு-உறைவிடப் பள்ளிகளில், ஏராளமான வசதிகளுடன் பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருவதால், பழங்குடியின மக்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளது.

மலைமாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், குறும்பர், இருளர், காட்டுநாயக்கர் என 5 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வசதியற்ற நிலையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால், இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்தது.

முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்பேரில், பழங்குடியின மக்களின் கல்விக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சார்பில், கூடலூர், பந்தளூர், உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் 18 உண்டு-உறைவிட ஆரம்பப் பள்ளிகள், 12 நடுநிலைப் பள்ளிகள், 27 உண்டு-உறைவிடப் பள்ளிகள், 7 ஆதிதிராவிடப் பள்ளிகள் அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், 4 செட் பள்ளி சீருடைகள், கம்பளி ஆடைகள், கணித உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவர் இறந்துவிட்டால், குழந்தைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பெண் கல்வியை ஊக்குவிக்க, 3-ம் வகுப்பு முதல் 5 வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கு 500 ரூபாய், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் என வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன.

மேலும், உண்டு-உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டில், மெத்தை, கம்பளி, தலையணை போன்றவை வழங்கப்படுவதுடன், 3 வேளையும் சத்தான உணவுகள் அளிக்கப்படுகின்றன.

முதலமைச்சர்  ஜெயலலிதா மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளால், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலம், நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.