முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார்:பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேச்சு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016,

தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா ரூ.570 கோடி ஒதுக்கியுள்ளார் என வலுதூக்கும் போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேசினார்.

அகில இந்திய அளவில் 32–வது ஜூனியர் மற்றும் மாஸ்டர்ஸ் தேசிய வலுதூக்கும் போட்டிகள் முதன்முறையாக வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரியில் நடந்து வருகிறது. கடந்த 24–ந் தேதி தொடங்கிய போட்டிகள் வருகிற 28–ந் தேதி வரை நடக்கிறது. 2–ம் நாள் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வலு தூக்கும் சங்க தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜ் கலந்து கொண்டு பதக்கங்களை அணிவித்து பேசினார்.

குடியாத்தத்தில் இந்த வலு தூக்கும் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. இந்த தேசிய போட்டியில் தேர்வு பெறும் விளையாட்டு வீரர்கள் ஆசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு மட்டும் ரூ.570 கோடியை ஒதுக்கி உள்ளார். சர்வதேச போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும், ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கி வருகிறார்.

2013–ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் வேலூரை சேர்ந்த சதீஷ் என்பவர் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி கூடம் கட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் சுந்தர்ராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில் கு.லிங்கமுத்து எம்.எல்.ஏ., வேலூர் மண்டல விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நாகராஜன், மாவட்ட செயலாளர் வி.ராமு, ரோட்டரி தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.