முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி

வெள்ளி, அக்டோபர் 07,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அதிமுக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா சில நாள் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்தார். மேலும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மருத்துவமனையில் மேலும் ஓய்வெடுக்க அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறினார்.