முதல்நிலை காவலர் பி.எம்.தேவி சாலை விபத்தில் படுகாயமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வருத்தம் : மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள ஆணை

முதல்நிலை காவலர் பி.எம்.தேவி சாலை விபத்தில் படுகாயமடைந்தது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வருத்தம் : மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள ஆணை

21 November 2015

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகர காவல், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணி புரிந்து வரும் திருமதி P.M. தேவி கடந்த 17-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகப் பணி நிமித்தமாக எண்ணூர் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் வருத்தமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் திருமதி தேவியின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள தாம் ஆணையிட்டுள்ளதாகவும், சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதல் நிலை காவலர் திருமதி தேவிக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலத்த காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் திருமதி தேவி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.