முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் : பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

சனிக்கிழமை, மார்ச் 04, 2017,

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பட்ஜெட்டை இறுதிசெய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலர் கே.சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரவை கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர். தொடர்ந்து 4.40 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 6.40 மணிக்கு முடிந்தது. 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், துறைவாரியாக பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் தொடர் பாக விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது.

தமிழக பட்ஜெட், புதிய திட்டங்கள், அரசுத் துறைகளுக்கான ஒதுக்கீடுகள், தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்டமசோதாக்கள், அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கவேண்டிய பதில்கள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தமிழக நிதிநிலை அறிக்கையை வரும் 20 அல்லது 22-ஆம் தேதியில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.