முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் 67 லட்சம் குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

திங்கள் , ஜனவரி 18,2016,

சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று காலை 7.00 மணிக்கு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையொட்டி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் 43,051 சொட்டு மருந்து மையங்களும், 1,652 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டன. இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
5 வயதுக்குட்பட்ட 67.17 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளை அறியும் வகையில், மருந்து புகட்டப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. ஐந்து வயதுக்கு உள்பட்ட 95.08 சதவீதம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்கு..: விடுபட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சனிக்கிழமை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மேலும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவர்.
இதுதவிர முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் இரண்டு நாள்களுக்கு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்தார். இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.